சென்னை,ஜூலை 24- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கென்றே பிரத்யேகமாகத் தனிக் காவல்நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காகப் புதிதாக 500 காவலரை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய ரயில் நிலையங்களுக்கென்று தனிப்பிரிவுக் காவல்துறையினர்( railway police) செயல்பட்டு வருகின்றனர்.அது போல்,மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கென்று தனிப்பிரிவுக் காவல்நிலையங்களும் காவல்துறையினரும் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் மெட்ரோ ரயில்வே காவல்துறையினர்(metro railway police) என அழைக்கப்படுவர்.
தற்போது, சென்னையில் கோயம்பேடு–ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன.
மற்ற வழித்தடங்கலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் முழுமை அடையும்போது 32 மெட்ரோ ரெயில் நிலையங்கள் செயல்பாட்டில் இருக்கும்.
எனவே, 32 மெட்ரோ ரயில் நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது பற்றிச் சென்னைக் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து நேரடியாக ஆய்வு செய்தார்.
இதனையடுத்து 32 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் பொதுவாக 7 காவல்நிலையங்கள் அமைக்க முடிவாகியுள்ளது. 50 காவல்துறை அதிகாரிகள் உட்பட, 500 காவலர்கள் அடங்கிய பாதுகாப்புப் படையை நியமிக்கவும் அரசுக்குச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.