சென்னை, ஜூன் 18- சென்னையில் மெட்ரோ தொடர்வண்டிப் பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன.
சாலையின் குறுக்கே மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், சாலையின் இருமருங்கும் பயணிகள் போக்குவரத்தும் நடந்து வருகிறது.
நேற்று 100 அடி உயரத்தில் இருந்து பெரிய இரும்புத் தூண் விழுந்து அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொறியியலாளர் ஒருவர் மணடை பிளந்து இறந்து போனார்.
மெட்ரோ வேலைகள் உயரமான பலத்தில் நடைபெறும் போதும், உயரமான பளுதூக்கிகளில் பணிகள் நடைபெறும் போதும் கீழே சாலைகளில் போவோரும் வருவோரும் ஒருவித அச்சத்துடனே அந்த இடங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது.
கடந்த 15 ஆம் தேதி அன்றும் நேற்று விபத்து நடந்த பகுதியிலேயே சிறிய இரும்புக் கம்பிகள் சரிந்து சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. நல்லவேளையாக அப்போது யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனால், அதற்கு அடுத்த நாளே ராஜ்குமார் என்பவர் மகிழுந்தில் வந்த போது, இரும்புக் கம்பி விழுந்து மகிழுந்தின் கண்ணாடி உடைந்தது. இதுபற்றி அவர் பரங்கிமலைக் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அப்போதே காவல்துறையினர் மெட் ரோ நிறுவனம் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்கள் உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள்.தொடர் விபத்துகளைத் தவிர்த்திருக்கலாம்.
மனித உயிர்கள் விலை மதிப்பில்லாதவை ;பல உயிர்களை வாழ வைப்பவை; பற்பல சாதனைகள் படைக்கக் கூடியவை. அப்படிப்பட்ட உயிரைக் கவனக் குறவால் போக்கிவிட வேண்டாம்.
இனிமேலாவது மெட்ரோ நிறுவனம் இதைக் கவனத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது தொழில் தர்மத்தோடும் சமூக அக்கறையோடும் ஒவ்வொரு நிறுவனமும் செய்ய வேண்டியது கடமையாகும்.