Home இந்தியா யானைக்குச் சொந்தம் கொண்டாடிய இருவர்: அசாம் நீதிமன்றத்தில் விநோத வழக்கு

யானைக்குச் சொந்தம் கொண்டாடிய இருவர்: அசாம் நீதிமன்றத்தில் விநோத வழக்கு

562
0
SHARE
Ad

de0a45f5-b3e3-4bb8-93a6-49ba0ba042be_S_secvpfஅசாம், ஜூன் 18-  யானைகளுக்குச் சொந்தம் கொண்டாடிய இருவர், அசாம் மாநில நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த விநோத வழக்கால் நீதிமன்றமே பரபரப்புக்குள்ளானது.
அசாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் உள்ள வங்கதேச எல்லைப்பகுதியில் இரு யானைகள் சுற்றித் திரிவதைக் கண்ட காவல்துறையினர், அவற்றைக் காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

அவ்வூரைச் சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்திற்கு வந்து, அந்த யானைகள் தன்னுடையது என்று கூறி, அவற்றைத் தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதேசமயம், வங்கதேசத்தில் இருந்து வந்த ஒருவர், யானைகள் இரண்டும் தனக்குத் தான் சொந்தம். அதனால் அவற்றை என்னிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னார்.

காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில்,வங்கதேசத்து நபர் தெரிவித்ததாவது:

#TamilSchoolmychoice

சில நாட்களுக்கு முன்னால் யானைகள் இரண்டும் காணாமல் போய்விட்டன. பல இடங்களில்  தேடியும் கிடைக்கவில்லை. அதனால் நான் அங்குள்ள காவல்  நிலையத்தில்  புகார் செய்தேன். அவர்கள் எல்லைப் பாதுகாப்புப் படையினரைத் தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது தான் யானை இங்குள்ளது தெரியவந்தது. எனவே எல்லைப் பாதுகாப்புப் படையினரின் அனுமதியுடன் எனது யானையை அழைத்துச் செல்ல வந்துள்ளேன் என்றார்.

ஆனால் உள்ளூர்க்காரரோ, ” நான் வளர்த்த தாய் யானை எட்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டது. அந்த யானை தான் இது. இப்போது தாய் யானையுடன் இருப்பது அதனுடைய குட்டி யானை” என்று சொன்னார்.

குழப்படைந்த காவல்துறையினர் யானையை யாரிடமும் ஒப்படைக்கவில்லை.

இதனால், யானையை ஒப்படைக்கக்கோரி இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். எனவே, யானைகள் இரண்டும் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டன.

இருவரையும் நீதிபதி விசாரித்தார். யானைகளைச் சாட்சிக் கூண்டில் ஏற்ற முடியாதல்லவா?

அதனால், மரபுகளை மீறி நீதிமன்றத்துக்கு வெளியே வந்த நீதிபதி, யானைகளை ஆய்வு செய்து, பின் வழக்கை வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனால் யானைகள் இரண்டையும் போலீசார் மீண்டும் காவல்நிலையத்திற்கே கொண்டு சென்றனர்.

இந்த விநோதமான வழக்கால் நீதிமன்ற வளாகமே சிறிது நேரம் கலகலப்பாக மாறியது.

பராசக்தி படத்தில், “இந்த நீதிமன்றம் பல விநோதமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது” என்று ஒரு வசனம் வரும். ஆனால், அசாம் நீதிமன்றம் இப்படியொரு விநோதமான வழக்கை இதுநாள் வரை சந்தித்திருக்காது!

ஒரு குழந்தைக்குச் சொந்தம் கொண்டாடிய இரண்டு பெண்களின் கதையையும், அதற்குக் கரிகாலன் கூறிய உணர்ச்சிப்பூர்வமான தீர்ப்பையும் கேள்விப்பட்டுள்ளோம். அதுபோல், ஒரு குதிரைக்குச் சொந்தம் கொணடாடிய இரண்டு பேரையும், அதற்கு மரியாதைராமன் கூறிய புத்திசாலித்தனமான தீர்ப்பையும் கேள்விப்பட்டுள்ளோம்.

அந்த வழக்கு போல் இதுவும் ஒரு வேடிக்கையான- விநோதமான வழக்கு தான். இதற்கு அந்த நீதிபதி என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார் என்று பார்ப்போம்.