கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – (அம்னோவில் அரங்கேறி வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான ‘எழுத்தாண்மை ஏந்தல்’ பெரு.அ.தமிழ்மணி வழங்கும் கண்ணோட்டம்)
அரசியலில் “கொல் அல்லது கொல்லப்படுவாய்” இதுவொரு எதார்த்தமான சுலோகம்! செவ்வாய்க்கிழமை பிரதமர் நஜிப் , மொகிதீனை விலக்கியிருக்காவிட்டால், இந்நேரம் நஜிப் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்க வேண்டி வந்திருக்கும் என்ற அதிர்ச்சியான தகவல் ஒட்டு மொத்த மலேசியர்களையும் மூக்கின் மீது விரலை வைக்க வைத்துள்ளது.
இதுதான் எதார்த்தம். ஞாயிறன்று செராஸ் அம்னோ கூட்டத்தில் அவ்வளவு கடுமையாக மொகிதீன் பேசுவதற்கு ஒரு வலுவான பின்னணி மொகிதீனிடம் அன்று இருந்தது.
“முடிந்தது கதை! இனி திறக்க வேண்டியது சிறைக்கதவுதான்” என்ற முடிவுக்கு மொகிதீன் வந்துவிட்டார்.
அதன் பின் அன்று இரவே நள்ளிரவில் அம்னோவின் முக்கியத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர். தமது தலைக்கு ஆபத்தான முடிவுக்கு ஒரு தரப்பிடம் தலையை ஆட்டிவிட்டுத்தான், அம்னோ கூட்டத்தில் மொகிதீன் எதிரொலித்தார்.
அவரின் யூகத்தின்படி ஞாயிறன்றே (இன்றே) எனது கதை முடிந்தது என்ற தீர்க்கமான முடிவுக்குப் பிறகே, மொகிதீன் அம்னோவின் துணைத் தலைவர் – துணைப்பிரதமர் என்ற மரபுகளையெல்லாம் மீறிப் பேசியிருக்கிறார்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி தனது தரப்பு நியாயத்தை பிரதமர் நிலை நிறுத்தியிருக்கிறார்.
அதன் விளைவு! மிகவும் அவசரமாக செய்ய வேண்டிய அமைச்சரவை மாற்றத்தில் “மொகிதீனை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதை விட வேறு வழி தனக்கு இருப்பதாக தெரியவில்லை” என்ற ஒப்புதலுக்குப் பிறகே திங்கள்கிழமை காலையிலிருந்து அமைச்சரவை மாற்றத்திற்கான வேலையில் தீவிரம் காட்டி, அன்றே மாமன்னரின் பார்வைக்கு அனுப்பி அன்று மாலையே அனுமதி பெற்று, மறுநாள் 3.00 மணிக்கெல்லாம் அமைச்சரவை மாற்றத்தை அறிவித்தார்.
அப்படி என்ன நெருக்கடி?
சிறப்புப் புலனாய்வுக் குழுவின் நால்வர் – (இடமிருந்து) முன்னாள் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் கனி பட்டேல், பேங்க் நெகாரா கவர்னர் சேத்தி, ஐஜிபி காலிட் அபு பாக்கார், ஊழல் தடுப்பு ஆணயத் தலைவர் அபு காசிம் முகமட்..
அப்படியென்றால் என்ன நெருக்கடி? என்ற கேள்வி எழலாம். இந்த நெருக்கடியில் பேங்க் நெகாரா கவர்னர் சேத்தி – அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) முதலில் சம்பந்தப்பட்டுளனர்,
அதன்பின் தலைமை போலீஸ் தலைவரையும் (ஐஜிபி) இணைத்துக் கொள்ள முனைந்துள்ளனர். இங்குதான் விசயம் கசியத் தொடங்கியது.
இவரே பிரதமர் கவனத்திற்கு ஒட்டு மொத்த பின்னணியையும் எடுத்து விளக்க வேண்டியவரானார்.
இந்த பின்னணிக்குப் பின்னால் முன்னால் பிரதமர் துன் மகாதீர், அவரின் ஊதுகுழலாக மொகிதீன் உள்ளடங்கியிருப்பது அம்பலத்திற்கு வரவே,
பிரதமர் தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் அதிரடியில் இறங்கினார்.
இங்குதான் “அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை! நிரந்தர விரோதியும் இல்லை” என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. நேற்று வரை நண்பர்கள் நஜிப்பும் -மொகிதீனும்- இன்று இருவரும் அரசியலில் கடும் பகைவர்கள்.
இங்குதான் மீண்டும்-” கொல்! அல்லது கொல்லப்படுவாய்,” என்ற ஹிட்லரின் தத்துவம் நம்மை பார்த்து சிரிக்க வைக்கிறது.
இன்று துணைப்பிரதமர் பதவியை இழந்திருக்கிற மொகிதின் அடுத்து அம்னோ துணைத்தலைவர் பதவியையும் இழக்கப்போவதும் உறுதிதான்.
அடுத்து கூடவிருக்கும் அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் மொகிதீனின் வசமுள்ள துணைத்தலைவர் பதவி கழட்டி எடுக்கப்படும்.
இதே போன்ற நிலைப்பாட்டை மகாதீர் மூன்று துணைப் பிரதமர்களிடம் (மூசா- கபார் பாபா- அன்வார்) செய்து காட்டி முன்னுதாரணத்தோடு, பெரும் சாதனையும் படைத்துள்ளார் என்பதால் அந்த வழிமுறையை நஜிப் பின்பற்றுவது அவ்வளவு சிரமமாகயிருக்காது.
– பெரு.அ.தமிழ்மணி
(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்குச் செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.
இந்தக் கட்டுரையையோ, அல்லது அதன் பகுதிகளையோ மறுபிரசுரம் செய்ய வேண்டுமென்றால், கட்டுரையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டும்.
தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்) அகப்பக்கத்தில் காணலாம். அவரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:
wrrcentre@gmail.com