Home உலகம் கிரேக்க நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் திடீர் பதவி விலகல்!

கிரேக்க நாட்டுப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் திடீர் பதவி விலகல்!

732
0
SHARE
Ad

21-aug-tsஏதன்ஸ், ஆகஸ்ட் 21- கிரேக்கப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளதோடு, திடீர்த் தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரேக்கம் கடந்த 5 ஆண்டுகளாகக் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

கிரேக்கத்திற்குக் கடனுதவி அளித்து வந்த ஐரோப்பிய கூட்டமைப்பு, கிரேக்கத்திற்குப் பல நிபந்தனைகளை விதித்தது; சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியது.

#TamilSchoolmychoice

பல கட்டப் பேச்சு வார்த்தைக்குப் பின்பு, ஐரோப்பிய கூட்டமைப்புடனான கடன் ஒப்பந்தத்திற்குப் பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ் சம்மதம் தெரிவித்தார். ஆனால், இந்தக் கடன் ஒப்பந்தத்திற்கு கிரேக்க நாட்டில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

மேலும், கடன் மீட்புத் திட்டம் தொடர்பாக அவரது கட்சியினருக்கும் அவருக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இப்படிப்பட்ட நெருக்கடியான  சூழ்நிலையில் சிக்கியுள்ள  பிரதமர் அலெக்சிஸ் சிப்ராஸ், நேற்று தொலைக்காட்சியில் பேசிய போது தான் பதவி விலகப் போவதாக அறிவித்தார்.

“கிரேக்கத்திற்குக் கடன் அளித்த சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதென்பது மிகவும் கடின காரியம். அதுமட்டுமல்லாமல் காலமும் கடந்து போய்விட்டது. எனவே, பிரதமர் பதவியிலிருந்து விலகித் தேர்தலைச் சந்திக்கப் போகிறேன்” என்றார்.

அதன்படி,கிரேக்க நாட்டின் அதிபரை விரைவில் சந்தித்துத் தமது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்கவிருக்கிறார்.

தேர்தல் அடுத்த மாதம் இருபதாம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடைபெறும் வரை, கிரேக்கம், பராமரிப்பு அரசாங்கத்தின் கீழ் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.