ஏதென்ஸ் – கிரீஸ் நாட்டின் ஏகென் கடல் பகுதியில் (Aegean Sea) நேற்று வெள்ளிக்கிழமை அகதிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் தனித்தனி சம்பவங்களில் கவிழ்ந்ததில் 42 அகதிகள் வரை மரணமடைந்துள்ளனர். மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
ஃபார்மாகோனிசி என்ற தீவுக்கருகில் கண்டெடுக்கப்பட்ட 7 சடலங்களில் அறுவர் குழந்தைகளாவர். பலர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதுவரை 41 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர்.
படகு விபத்தில் பாதிப்படைந்தவர்களை அதிகாரிகள் காப்பாற்றும் காட்சி…
காலோலிம்னோஸ் என்ற தீவுக்கு தெற்கே நிகழ்ந்த மற்றொரு படகு விபத்தில் அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில் மேலும் 14 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 26 பேர் உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். என்றும் மேலும் 70 முதல் 100 பேர்வரை அந்த படகில் இருந்திருக்கலாம் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் போர்களில் இருந்து தப்பிப்பதற்காக அந்நாட்டு மக்கள் அகதிகளாக, துருக்கியிலிருந்து புறப்பட்டு கிரீஸ் நாட்டுக்கு பாதுகாப்பற்ற படகுகளின் மூலம் பயணப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்குள் தஞ்சம் அடைவதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.