கோலாலம்பூர், மார்ச்.11- “எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளை நூலாகக் கொண்டு வரும் போது அதனை தேசிய நூலகத்தில் பதிவுச் செய்து அதற்குரிய எண்களை பெற்று புத்தகத்தில் அச்சிட வேண்டும்.
அதன் வழியாகவே மட்டுமே அரசாங்கத்தின் உதவி பெற முடியும்” என்று தகவல், தொடர்பு, பண்பாட்டுத்துத் துறை துணையமைச்சர் டத்தோ மெக்லின் டிக்ருஸ் கூறினார்.
எனவே, நமது எழுத்தாளர்கள் தேசிய நூலகத்தில் தங்களின் புத்தகங்களைப் பதிவு செய்யாத காரணத்தால், அது பற்றிய தகவல் அரசாங்கத்தின் கவனத்திற்கு தெரியாமல் போய் விடுகிறது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளால் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேசிய நூலகம் திரும்பி பார்க்கத் தொடங்கி இருக்கிறது என்று துணையமைச்சர் சொன்னார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய பனிமனையையும், அதில் அமைந்துள்ள தமிழவேள் ஆதி.குமணன் அரங்கத்தையும் திறந்து வைத்து துணையமைச்சர் செனட்டர் டத்தோ மெக்லின் டிக்குருஸ் பேசினார்.
புதிய பணிமனை அமைந்துள்ள கட்டடம் மக்கள் ஓசை நாளிதழுக்கு சொந்தமானது. ஒரு மாடி முழுவதையும் மக்கள் ஓசை நிறுவனம் வாடகை இல்லாமல் இலவசமாக கொடுத்து உதவியுள்ளது.
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் மக்கள் ஓசை செய்திருக்கும் உதவிக்குச் சங்கத்தின் நன்றியைப் புலப்படுத்துவதாகவும் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரன் குறிப்பிட்டார்.