Home Featured உலகம் அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்கு உத்தரவாதமில்லை – சிங்கப்பூர் பிரதமர்

அண்டை நாடுகளுடனான நல்லுறவுக்கு உத்தரவாதமில்லை – சிங்கப்பூர் பிரதமர்

513
0
SHARE
Ad

LeeHsienLoongசிங்கப்பூர் – சிங்கப்பூர் தனது அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா ஆகியவற்றுடன் தொடர்ந்து சுமூகமான நல்லுறவை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை என சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தினக் கூட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்த 10 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாது. அதேபோல் அடுத்த 50 ஆண்டுகளில் நிலையற்றதன்மை, பதற்றம், ஆசியாவில் போர் கூட மூளலாம்” என்று லீ சியான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மிக நெருக்கமான அண்டை நாடான மலேசியாவை, சிங்கப்பூர் தொடர்ந்து அணுக்கமாகக் கவனித்து வருவதாகக் குறிப்பிட்ட லீ, ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் தொடர்புடைய மலேசியர்கள் கைது, லோ யாட் பிளாசாவில் நடைபெற்ற கலவரம் போன்ற விவகாரங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது 1எம்டிபி விவகாரத்தில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் லீ சியான் சுட்டிக் காட்டியுள்ளார்.

“இதெல்லாம் மலேசியாவின் பிரச்சனைகள் தான். நாம் வேறு நாடு. 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களை விட்டு பிரிந்து வந்துவிட்டோம். என்றாலும் இந்த இரு நாட்டின் சமூகமும், பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று பிணைந்து தான் உள்ளது. எனவே அவர்கள் பிரச்சனைகள் எளிதில் நமது பிரச்சனைகளாக மாறும் வாய்ப்பு உள்ளது. மலேசியாவிற்கு பாதிப்பு என்றால் அது நமது பொருளாதாரத்திலும், சமூகத்திலும், பாதுகாப்பிலும் தாக்கத்தை உண்டு பண்ணும்” என்றும் லீ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தோனேசியாவுடன் சிங்கப்பூர் பல ஆண்டுகளாக நட்பு பாராட்டி வருவதாகக் குறிப்பிட்ட லீ, எனினும் சில இந்தோனேசியர்கள், சிங்கப்பூர் ஒரு சிறிய அண்டை நாடு தங்களுடைய செலவில் அளவற்ற வெற்றியடைவதாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.