கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் ரிங்கிட் நிதி வந்ததன் தொடர்பில், அம்னோ உறுப்பினர் ஒருவர் இன்று நஜிப்புக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.
இது குறித்து அவரது வழக்கறிஞர் ஹனீஃப் காத்ரி ‘த மலேசியன் இன்சைடர்’ இணையதளத்திடம் கூறுகையில், ஜாலான் டூத்தா உயர்நீதிமன்றத்தில் இன்று காலை அவ்வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“அம்னோ தேசியத் தலைவரின் (நஜிப்) வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட், எங்கே இருந்து வந்தது? எங்கே போனது? இப்போது எவ்வளவு மீதம் இருக்கிறது? மற்றும் அம்னோவிற்கு பயன்படும் வகையில் அதை திரும்பிக் கொடுப்பது போன்ற கேள்விகளைக் கேட்கும் இது அடிப்படையில் அம்னோவின் மீது அம்னோ பதிவு செய்யும் வழக்கு ” என்று தெரிவித்துள்ளார்.
மனுதாரர் அம்னோவின் பெண் உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ள ஹனீஃபா இன்று பிற்பகல் அது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.