கூச்சிங்- மலேசிய அரசியலில் அடுத்த பரபரப்புக் களமாக இருக்கப் போகின்றது என எதிர்பார்க்கப்படும், சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் எந்த தேதியில் தேர்தல் நடைபெறும் என்பதை தெரிவிக்க அம்மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அட்னான் சாத்திம் (படம்) மறுத்துவிட்டார்.
“தேர்தல் தேதியை நான் முடிவு செய்துள்ளேன். ஆனால் அதை இப்போது வெளியிட மாட்டேன்” என்றார் அவர்.
தேர்தல் இந்தாண்டு நடைபெறுமா அல்லது அடுத்த ஆண்டில் நடைபெறுமா? என்ற கேள்விக்கு வழக்கம்போலவே, “ஜூன் 20ஆம் தேதிக்கு முன் நடைபெறும்” என்று அட்னான் பதிலளித்தார்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சரவாக் சட்டமன்றத்தின் ஐந்தாண்டு கால பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வருகின்றது.
நவம்பர் மாதம் மாநில நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் சட்டமன்றம் கலைக்கப்படலாம் என இரு வாரங்களுக்கு முன்னர் உள்ளுர் நாளேட்டிடம் அட்னான் தெரிவித்திருந்தார்.
இம்மாநிலத்தில் தற்போதுள்ள 71 சட்டமன்ற தொகுதிகளுடன் மேலும் 11 புதிய தொகுதிகளை சேர்க்க உள்ளது தேர்தல் ஆணையம். இந்நிலையில் புதிய தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமென சரவாக் தேசிய முன்னணி விரும்புவதாக அட்னான் கூறினார்.
இந்நிலையில், மாநிலத் தேர்தல் அடுத்த ஆண்டுதான் நடைபெறும் என தாம் நம்புவதாக, சரவாக் பிகேஆர் தலைவரும் பத்து லிந்தாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சீ ச்சீ ஹௌ கூறியுள்ளார்.
இதேபோல் பிஆர்எஸ் தலைவர் டான்ஸ்ரீ ஜேம்ஸ் மாசிங் கருத்து தெரிவிக்கையில், இந்தாண்டு தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்றும், அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தல் நடக்கக்கூடும் என்றும் கூறினார்.
அடுத்த மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளைப் பூர்த்தி செய்வார் அட்னான்.