போர்ட் கிள்ளான் – பெர்சே 4.0 பேரணியில் கலந்து கொண்டதற்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட முக்கியத் தலைவர்கள் விசாரணை செய்யப்படவுள்ளனர்.
மகாதீரைத் தவிர சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி போன்ற எதிர்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கைகளைப் பெறும் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.
இன்று கடலோரக் காவல்படையின் 68-வது காவல்படை தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காலிட், பெர்சே ஏற்பாட்டாளர்களையும், அதில் கலந்து கொண்ட முக்கியப் புள்ளிகளையும் விசாரணை செய்வோம் என்றும், அதிலும் குறிப்பாக பேரணி கலந்து கொண்ட முக்கியப் புள்ளிகள் வெளியிட்டுள்ள கருத்துக்களையும் விசாரணை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
“உதாரணமாக, அம்னோ தொகுதித் தலைவர்கள் லஞ்சம் வாங்கியதாக டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார். எனவே அந்தத் தகவல் அவருக்கு எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியவேண்டும். காவல்துறைக்கு மகாதீர் ஒத்துழைப்பு கொடுப்பார் என்று நம்புகின்றோம்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.