புதுடில்லி – இந்தியா முழுவதும் ஒரே சீரான வரியை (ஜிஎஸ்டி) அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ஆம் தேதி கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இதற்காகச் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்ட திருத்த மசோதாவை டில்லி மேல்–சபையில் நிறைவேற்ற மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
மழைக்காலக் கூட்டத்தொடரில் வியாபம் ஊழல் என்று சொல்லப்படுகின்ற மருத்துவ நுழைவுத்தேர்வு ஊழல், லலித்மோடிக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவி செய்த விவகாரம் போன்ற பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் முடங்கின.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 1–ஆம் தேதி முதல் சரக்கு, சேவை வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக மீண்டும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை நீட்டிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டது.
ஆனால், இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதையடுத்து பாராளுமன்றக் கூட்டத்தொடரை நீட்டிப்பது குறித்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது.