டெக்சாஸ் – “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற கதையாக அமெரிக்க காவல்துறை, சமீபத்தில் அகமட் என்ற இஸ்லாமிய சிறுவனை, வெடிகுண்டு வைத்திருந்தான் என்று கூறி கைது செய்தது. அதன் பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில் தான், சிறுவன் வெடிகுண்டு வைக்கவில்லை என்பதும், அறிவியலில் ஆர்வம் கொண்ட அவன், மின்னணு கடிகாரம் ஒன்றை தானாகவே வடிவமைத்துள்ளதும் தெரிய வந்தது.
அப்புறம் என்ன வழக்கம் போல், காவல்துறை அசடு வழிய, ஒபாமாவும் பிற அரசியல் தலைவர்களும் தாங்கள் உருவாக்கிய இந்த பிம்பத்திற்கும் தங்களுக்கும் சம்மந்தமே இல்லாதது போல், காவல்துறையை கடிந்து கொண்டுள்ளனர்.
டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்கில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைப்பள்ளியில் படித்து கொண்டிருக்கும் அகமத்திற்கு வயது பதினான்கு. சிறுவன் அகமத்திற்கு அறிவியல் தான் பொழுது போக்கு. அப்படி பொழுது போக்காக ஒருநாள், மின்னணு கடிகாரம் ஒன்றை வீட்டிலேயே தயாரித்து அதனை தனது ஆசிரியரிடம் கொண்டு சென்று காட்டியுள்ளான். பிஞ்சு மனதை புரித்துகொள்ளாத அந்த ஆசிரியர், சிறுவன் வெடிகுண்டு தயாரித்து இருப்பதாக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.
நிர்வாகமும் உடனடியாக காவல்துறையை அழைக்க, காவல்துறையும் தனது கடமையை செவ்வனே செய்துள்ளது. உடனடியாக சிறுவனை கைது செய்து காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளது. அப்புறம் தான் அது வெடிகுண்டு அல்ல, சிறுவனின் கண்டுபிடிப்பு என தெரியவந்துள்ளது. இந்த விவகாரம், இணைய தளங்களில் வெளியாக, பொங்கி எழுந்த இணையவாசிகள் அமெரிக்காவை சபித்துத் தீர்த்துவிட்டனர்.
இந்த விவகாரம் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் போன்ற தலைவர்களின் காதுகளை எட்ட, அவர்கள் காவல்துறையை கடிந்து கொண்டது மட்டுமல்லாமல் சிறுவனுக்கு தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். ஒபாமா ஒருபடி மேலே சென்று, சிறுவனை வெள்ளை மாளிகைக்கு கடிகாரத்துடன் வரும்படி சிறப்பு அழைப்பும் விடுத்துள்ளார்.
சிறுவன் ஒரேநாளில் உலகம் முழுவதும் பிரபலமாகி இருந்தாலும், ஒரு சிறிய கடிகாரம் செய்ததற்காக கைது செய்யப்படுவோம் என கனவிலும் நினைத்து இருக்கமாட்டான்.