நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரத்துக்கு முன்பே விமான விபத்தில் பலியானதாகக் கூறப்படுகிறது. எனினும் பல ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் இந்திய அரசிடம் உள்ளது. அவற்றை வெளியிட பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய போதும், இந்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் நேதாஜி குறித்த இதர ஆவணங்களை இந்திய அரசு வெளியிட வேண்டும் என மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
நேதாஜி குறித்த தகவல்களை அறிந்துகொள்ள மேற்கு வங்க மக்கள் ஆர்வத்தோடு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கொல்கத்தா மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் உள்ள மக்களிடம் இதுகுறித்த ஆர்வம் உள்ளதாகத் தெரிவித்தார்.
நேதாஜி பற்றிய விவரங்களை வெளியிட்டால் சில நாடுகளுடனான உறவு பாதிக்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதை சுட்டிக்காட்டிய அவர், சுதந்திரமான ஒரு நாடு, அதன் தலைவர்கள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் சூழ்நிலை வரும்போது பிற நாடுகளை பார்த்து பயப்பட தேவையில்லை என்றார்.
“இன்னும் எத்தனை காலம்தான், இதை மறைக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது? ஆவணங்களை வெளியிட்டால் கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. கலவரம் வெடித்தால் அதைச் சமாளிப்போம். நேதாஜி, சர்தார் வல்லபாய் பட்டேல், பகத்சிங் போன்றோரை மக்களின் கதாநாயகர்களாகப் பார்க்கிறார்கள். எனவே நேதாஜி குறித்த தகவலை மட்டும் மறைப்பதில் நியாயம் இல்லை,” என்றார் மம்தா.