வாஷிங்டன் – ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்திர இடம் பெறுவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐநா பாதுகாப்பு ஆணையத்தை விரிவுப்படுத்த விவாதிக்கக் கோரும் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
வாஷிங்டனில் நடைபெற்ற இந்திய, அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் வருடாந்திரக் கூட்டத்தின் முடிவில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இருவரும் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், ‘‘இந்தியாவை நிரந்தர உறுப்பினர் ஆக்கி ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் சீர்திருத்தம் செய்வதற்கு அமெரிக்கா தனது ஆதரவை மீண்டும் உறுதி செய்கிறது.
ஐநா சாசனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்துலக அளவில் அமைதியையும், பாதுகாப்பையும் பராமரிப்பதில் ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் தொடர்ந்து இரு நாடுகளும் வலுவான- சிறப்பான பங்களிப்பை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.