கோலாலம்பூர் : மெக்காவில் நிகழ்ந்த நெரிசலில் இதுவரை மலேசியர்கள் யாரும் காயமடைந்ததாகவோ, அல்லது மரணமடைந்ததாகவோ, தகவல்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மலேசியாவின் ஹஜ் பயணிகளுக்கான அமைப்பான தபோங் ஹாஜியின் தன்னார்வ தொண்டூழியர்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர் என பிரதமர் துறையின் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜமில் கிர் பஹாரோம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த நேரமும், மலேசிய ஹஜ் பயணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பயண அட்டவணை நேரமும் வேறுபடுவதால் மலேசியப் பயணிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகின்றது.
இருப்பினும் மலேசியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனரா என்பதை உறுதி செய்ய கணக்கெடுப்பு நடைபெறுவதாகவும் ஜமில் பஹாரோம் தெரிவித்துள்ளார்.
தற்போது மெக்காவில் இருக்கும், பிரதமர் துறையின் துணையமைச்சர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கியும், இதுவரை மலேசியர்கள் யாரும் நெரிசல் விபத்தில் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.
தபோங் ஹாஜி அமைப்பு தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வரும் என்றும், தேவைப்படும் தகவல்களை வழங்கி வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.