Home நாடு “ஏழைகளுக்கு உதவிக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

“ஏழைகளுக்கு உதவிக் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

462
0
SHARE
Ad

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி

புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் மலேசிய முஸ்லீம் சமூகத்தினர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹஜ்ஜூப் பெருநாள் நமது சகோதர முஸ்லீம் சமூகத்தினரால் இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகக் கொண்டாடப்படுகின்றது. முதலாவது ஏழை, எளியவர்களுக்கு ஈகை வழங்கும் தியாகத் திருநாளாகப் போற்றிக் கொண்டாடப்படுகின்றது.

இரண்டாவது நோக்கம், ஒவ்வொரு முஸ்லீமின் தலையாய முதன்மைக் கடமையான புனித மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதாகும்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொவிட் தொற்று காரணமாக நமது முஸ்லீம் சமூகத்தினரில் பெரும்பாலோர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியவில்லை. சொற்ப எண்ணிக்கையிலானவர்களுக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் மலேசிய முஸ்லீம்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்தாண்டு, வாழ்க்கை வழக்க நிலைமைக்குத் திரும்பி, நமது முஸ்லீம் சகோதர, சகோதரியர் பெருமளவில் தங்களின் வாழ்நாள் கடமையான புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என நம்பிக்கைக் கொள்வோம்.

எனினும் ஈகைத் திருநாளாகவும், தியாகத் திருநாளாகவும் முஸ்லீம் சமூகத்தினரால் போற்றப்படும் இந்த நன்னாளில் உள்நாட்டிலேயே ஏழை மக்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உணவளித்து இந்த ஹஜ்ஜூப் பெருநாளின் மாண்பை உணர்த்தும் வண்ணம் அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

குறிப்பாக, கொவிட் தொற்றால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வருமானத்தை அவர்கள் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவுகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் வழங்குவதன் மூலம் ஹஜ்ஜூப் பெருநாளின் நோக்கத்தைப் புனிதப்படுத்தும் வண்ணம் முஸ்லீம் சமூகத்தினர் ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாட முடியும்.

கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மற்ற மாநிலங்களுக்கு ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு கடந்து செல்வதற்கும் குடும்பத்தினரைச் சந்திப்பதற்கும் அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது.

அதனை நமது முஸ்லீம் அன்பர்களும் மற்றவர்களும் பொறுமை காத்து, தவறாது கடைப்பிடித்து, கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த நாமும் நமது பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

விரைவில் நாம் அனைவரும் இயல்பான நமது பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்பவும், இதுபோன்ற பெருநாட்களைக் குடும்பத்தினரோடு மீண்டும் இணைந்து கொண்டாடவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியவும் வேண்டிக் கொள்வோம்.