மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ எம் சரவணனின் தியாகத் திருநாள் வாழ்த்துச் செய்தி
ஹரி ராயா ஹாஜி எனும் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இனிய ஹாரி ராயா ஹாஜி வாழ்த்துகள்.
பக்ரீத் பண்டிகை எனவும் அறியப்படும் இந்தத் தியாகத் திருநாள், தியாக விழாவாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஏழைகளுக்கும், அண்டை அயலாருக்கும், உறவுகளுக்கும் பகிர்ந்து கொடுத்து, அவர்களுடனும் இணைந்து கொண்டாடுவதே இந்தப் பெருநாளின் உன்னதமாகும்.
“நீங்களும் உண்ணுங்கள், கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்” எனும் கருப்பொருளைக் கொண்ட இந்தத் திருநாள் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே கடைப்பிடிக்க வேண்டிய ஓர் உயர்ந்த பண்பாகும். நாம் கொண்டாடும் ஒவ்வொரு கொண்டாட்டங்களுமே இதையே நிலைநிறுத்துகின்றன.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாகக் கொரோனாவின் பரவலால் மக்கள் சுகாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சுதந்திரமாய் சுவாசித்த காற்று இன்று நமக்கு எதிரியாகி வருகிறது. கொரோனாவின் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டாலும் தனிமனித ஒழுக்கமின்றி, சுய கட்டுப்பாடின்றி நம்மால் இதிலிருந்து மீள முடியாது.
முழுமையாக இந்தத் தொற்றிலிருந்து விடுபடாமல் பொருளாதாரத்திலும் மீட்சி அடைய இயலாது என்பதை நாம் உணர வேண்டும். எனவே எழைகளின் கண்ணீரை மனதில் நிறுத்திக் கட்டுப்பாடுடன் இருப்போம்.
ஹாரி ராயா ஹாஜி கொண்டாட்டத்தின் போது, கோவிட் 19 பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவும், விழிப்புடன் இருக்கவும் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதே வேளையில் இந்தத் தியாகப் பெருநாளில் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் உண்ண உணவில்லாமல், வாழ வழியில்லாமல் தத்தளிப்பதைப் பார்த்தால் உதவிக்கரம் நீட்டுங்கள். மன உளைச்சலால் இன்று ஒரு சிலர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதை நாம் காண்கிறோம். அதற்கு ஏதோ ஒரு வகையில் நாம் காரணமாக இருந்துவிடக் கூடாது. உறவுகளுடன், நண்பர்களுடன், அண்டை அயலாருடன், அறிமுகம் இல்லாதவர்களுடன் கூட ஆறுதலாகப் பேசுவோம். அவர்களின் நிலையைக் கண்டறிவோம். இயன்ற உதவிகளைச் செய்வோம்.
இன்றைக்குப் பிறருக்கு உதவும் இடத்தில் நீங்கள் இருந்தால் அது நீங்கள் செய்த புண்ணியம். எனவே கொடுத்து உதவுங்கள்.
உதவி தேவைப்படுபவர்களும் தயங்காமல் பிறரின் உதவியை நாடுங்கள். அதற்காக யாரும் வெட்கப்படத் தேவையில்லை. உலகளவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பில் நாம் மட்டும் விதிவிலக்கல்ல என்பதை நினைவில் கொள்வோம்.
அரசாங்கமும், பொது இயக்கங்களும், தன்னார்வலர்களும் ஆங்காங்கே தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக உணவுப் பெட்டிகளும், உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அந்தந்த தொகுதி மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் மான்யம் வழங்கியுள்ளது. எனவே தேவைப்படுபவர்கள் உங்களது தொகுதி பொறுப்பாளரிடம் தயங்காமல் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.
புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு செல்லும் சூழல் இந்த வருடம் இல்லை. ஆனால் இது நிரந்தரமல்ல. விரைவில் நிலை மாறும் என்ற நம்பிக்கையோடு இன்றைய ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவோம்.
இனிய தியாகத் திருநாள் வாழ்த்துகள்