கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் கொவிட் தொற்றுகளின் பரவல் தொடர்ந்து நாளொன்றுக்கு 10 ஆயிரத்தைக் கடந்து, தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறத்தில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதுவரையில் செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை நேற்று திங்கட்கிழமை (ஜூலை 19) நள்ளிரவு வரையில் 14,772,221 ஆகப் பதிவாகியிருக்கின்றன.
நேற்று நள்ளிரவு வரையில் ஒரே நாளில் 424,936 தடுப்பூசிகள் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்டிருக்கின்றன.
இதுவரையில் 10,097,841 எண்ணிக்கையிலானோர் முதல் தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள்.
எஞ்சிய 4,674,380 பேர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 14 விழுக்காட்டினருக்கும் மேற்பட்ட மக்களுக்கு முழுமையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.
ஜூலை மாதத்திற்குள் மேலும் 14 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் கூடுதலாக மலேசியாவுக்குள் வந்தடையும் என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினும் பிரதமர் மொகிதின் யாசினும் அறிவித்திருக்கின்றனர்.
இதில் 2 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் கிள்ளான் பள்ளத்தாக்கிலும், நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கும் விநியோகிக்கப்படும் எனவும் மொகிதின் யாசின் கூறியிருக்கிறார்.