கோலாலம்பூர் – (மலேசியாவின் கல்விச்சூழலில் மெதுநிலை மாணவர்களின் நிலையை ஒட்டி எழுத்தாளர் ம.நவீன் எழுதிய ‘வகுப்பறையின் இறுதி நாற்காலி’ என்ற நூல் தமிழகத்திலும் இலங்கையிலும் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 11.10.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30க்கு கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைபெறுகிறது. மலேசியக் கல்விச்சூழல் மீது பரந்த பார்வையை ஏற்படுத்தும் இந்நூல் குறித்த சில எழுத்தாளர்களின் கருத்துகள் ‘செல்லியல்’ வாசகர்களின் பார்வைக்கு:)
ம.நவீன்
ஒரு பள்ளி ஆசிரியரான நவீனின் அனுபவங்களின் வெளிப்பாடு…
“இது புனைவல்ல; நவீன் எனும் பள்ளி ஆசிரியரின் ரத்தமும் சதையுமான அனுபவம். தான் வாழும் சமூகம் மீதான நேசமும் அக்கறையும் அதன் கரடுதட்டிப்போன மூடத்தனங்களின் மீது சீற்றமும் கைத்துப் புளித்துப்போன பழம்பெருமைகள் மீதான வன்மமும் இவையெல்லாம் தெறித்து விழுகிற முதற்கை அறிக்கையிது.
மலேசியாவின் கல்விச்சூழலில் அவருக்கு நேர்ந்த அனுபவங்களிவை. தமிழ்நாட்டுக் கல்விச் சூழலுக்கு இது எந்த அளவுக்கு பொருந்துமென கேள்வியெழுப்பலாம்.
ஒன்றை என்னால் சொல்லவியலும். எழுத்தறிவு இயக்கத்திலிருந்து இன்றைய ‘அனைவருக்கும் ஆரம்பக் கல்வி இயக்கம் வரை பலவிதமான ‘கல்வி’ செயல்பாடுகளில் ஏதேனும் ஒரு சிறிய அளவிலாவது ஈடுபட்டிருந்த எனக்கு ,நவீன் என்ற பள்ளியாசிரியரின் அனுபவங்கள் மிக முக்கியமானவையாகப்படுகின்றன.”
பிரளயன், நாடக ஆசிரியர்.
யாரையும் காயப்படுத்தாத அரவணைப்பு மனம் கொண்ட சிந்தனைகள்
It is frequently a misfortune to have very brilliant men in charge of affairs. They expect too much of ordinary men.”
Thucydides
“பொதுவாக ஒரு பள்ளி ஆசிரியரின், பள்ளி,கல்வியமைப்பு,மாணவர்கள் பற்றிய கட்டுரைகள் – அதிலும் தன்னைப் பின் தங்கிய ஆசிரியனென்று சொல்லிக் கொள்ளும் ஒருவரின் கட்டுரைகள்- அவ்வளவு சுவாரசியம் மிக்கவையாக இருக்குமா என்று உங்களுக்குத் தோன்றலாம்.
அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டு இந்தப் புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள். சுவாரசியமென்பதை விட பொறுப்பும் ஆதங்கமும் மிளிர இவை எழுதப்பட்டிருக்கும் விதம் நிச்சயம் உங்களை வியப்பிலாழ்த்தி விடும்.
“வகுப்பறையின் இறுதி நாற்காலி” என்ற இந்த நூலில் எளிய, சிறிய வாக்கியங்கள், யாரையும் காயப்படுத்தாத அரவணைப்பு மனம் கொண்ட சிந்தனைகள், என விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத நடையொழுக்குடன் எழுதப்பட்டவை இவை. ஒவ்வொரு கட்டுரை முடியும் போதும் எவ்வளவு சமூகக் கரிசனம் மிக்க செய்திகளைச் சொல்லியிருக்கிறார் இவர் என்று தோன்ற வைக்கிறார் நவீன்.”
கவிஞர் கலாப்ரியா
கல்வியில் அக்கறையுடைய எல்லோரும் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்
‘வகுப்பறையின் கடைசி நாற்காலி’ நான் சமீபத்தில் படித்த முக்கியமான நூல்களுள் ஒன்று. அளவில் சிறியது, ஆனால், நம் சிந்தனையைக் கிளறுவது.
பள்ளிக் கல்வியாயினும், பல்கலைக்கழகக் கல்வியாயினும் அது மாணவர் மையக் கல்வியாக இருக்கவேண்டும் என்பதையே கல்விச் சிந்தனையாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், நடைமுறையில் நமது கல்வி, பரீட்சை மையக் கல்வியாகவே இருக்கின்றது. இதன் விபரீதங்களை இந்நூலாசிரியர் நவீன் தன் சொந்த அனுபவங்கள் ஊடாக விபரிக்கிறார்.
எம். ஏ. நுஃமான்
அவர் பயிற்றப்பட்ட, அனுபவமுடைய பள்ளி ஆசிரியர். தன் தொழில் பற்றிய விழிப்புணர்வும் விமர்சன நோக்கும் உடையவர். பின்தங்கிய மாணவர்கள் என்று யாரும் இல்லை. குடும்ப, சமூகச் சூழலும், பள்ளிகளும், நமது கல்விமுறையும் மாணவர்களில் ஒரு கணிசமான தொகையினரைப் பின்தங்கியவர்களாக ஆக்கிவிடுகின்றன என்பதையும், ஆசிரியர்கள் புரிந்துணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால் அதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதையும் அழுத்திக் கூறும் இந்நூல் கல்வியில் அக்கறையுடைய எல்லோரும் கட்டாயம் படிக்கவேண்டிய ஒன்றாகும்.
எம். ஏ. நுஃமான்