கோலாலம்பூர்- பத்துகவான் அம்னோவின் முன்னாள் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபுஹாசன் (படம்) 2012 சொஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மலேசியக் காவல் துறையின் துணைத் தலைவர் (துணை ஐஜிபி) டத்தோஸ்ரீ நூர் ரஷிட் இப்ராகிம் வியாழக்கிழமை தெரிவித்தார்.
புதன்கிழமை அன்று காவல் துறையின் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரை ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் வைத்து காவல்துறை மீண்டும் கைது செய்தது.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு குந்தகம் விளைவித்ததன் பேரில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். முன்னதாக ஒரு வாரத்திற்கு முன்பாக முதன்முறையாக தனது வீட்டில் வைத்து கைருடின் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சொஸ்மா சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் விசாரணை விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளதாக நூர் ரஷிட் கூறினார்.
மலேசிய விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதற்கான முயற்சிகளை கைருடின் மேற்கொண்டதாக ரஷிட் மீது புகார் எழுந்துள்ளது. குறிப்பாக 1எம்டிபி விவகாரத்தை வைத்து மலேசியாவுக்கு உலக நாடுகள் அழுத்தம் தருவதற்கான முயற்சிகளில் கைருடின் ஈடுபட்டதாகவும், இது நாட்டிற்கு எதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுவதற்கு சமம் என்றும் ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது ஆணையை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு
இதற்கிடையில், Security Offences (Special Measures) Act (Sosma) 2012 – “சொஸ்மா” எனப்படும் 2012ஆம் ஆண்டின் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை) சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து கைருடின் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பார் என அவரது வழக்கறிஞர் முகமட் ரஃபிக் ரஷிட் அலி தெரிவித்துள்ளார்.
நேற்று டாங் வாங்கி காவல் நிலையத்தில் கைருடினைச் சந்தித்த பின்னர் முகமட் ரஃபிக் இவ்வாறு தெரிவித்தார். இதற்காக ஆறு வழக்கறிஞர்கள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி வரை கைருடின் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.