கோலாலம்பூர் – கைது செய்யப்பட்டு ‘சொஸ்மா’ சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் இருக்கும் பத்துகவான் அம்னோ முன்னாள் உதவித் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் ஹாசானிடம் (படம்) டெங்கி காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவர் கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். “தற்போது அவர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு டெங்கி பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. பார்வையாளர்கள் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அவரை என்னால் சந்திக்க முடியுமா என்பது நாளை (சனிக்கிழமை) தெரியவரும்” என கைருடினின் வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போது சொஸ்மா சட்டத்தின் கீழ் 28 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் கைருடின்.
நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு குந்தகம் விளைவித்ததன் பேரில் கடந்த வியாழக்கிழமை முதல் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். போலீஸ் காவல் முடிந்த பின்னர் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் வைத்து கடந்த புதன்கிழமை மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சொஸ்மா சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக துணை அரசு வழக்கறிஞரிடம் விசாரணை விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளதாக காவல் துறை துணைத் தலைவர் நூர் ரஷிட் கூறியுள்ளார்.