கோலாலம்பூர்- வித்தியாசமான விதம் விதமான உணவுகளைச் சுவைக்கவும், சுலபத்தில் கிடைக்காத சில பிராணிகளின் இறைச்சி வகைகளை ஒரு கை பார்ப்பதற்கும், அசைவ உணவுப் பிரியர்கள் கோலாலம்பூரில் தேடிச் செல்லும் சாலை புக்கிட் பிந்தாங் பகுதியில் உள்ள ஜாலான் அலோர்.
குறிப்பாக சீன வகை அசைவு உணவு தயாரிப்புகளின் சொர்க்கம் என்றால் அது அலோர் சாலைதான்.
“அலோர்” என்றால் மலாய் மொழியில் ‘சாக்கடை’ என்ற அர்த்தம் என்றாலும், அதற்கு சம்பந்தம் இல்லாத அளவுக்கு சுற்றுப் பயணிகளும், மலேசியர்களும் உணவுக்காக வந்து குவியும் இடம் இது.
கடந்த சில நாட்களாக பெட்டாலிங் ஸ்ட்ரீட் சாலைதான் மலேசியர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தது என்றால், இப்போது இந்த ஜாலான் அலோர் சாலையும், தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மலேசியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வழக்கமாக இயங்கிய ஜாலான் அலோர்
தீவிரவாத அச்சுறுத்தலையும் மீறி ஜாலான் அலோர் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை வழக்கமான முறையில் வர்த்தகம் நடைபெற்றது. அங்குள்ள கடைகள், உணவகங்கள் மற்றும் தங்கு விடுதிகள் என அனைத்துமே வழக்கம் போல் இயங்கின.
சுற்றுப் பயணிகளின் மிக முக்கிய தேர்வாக உள்ள புக்கிட் பிந்தாங் பகுதிக்கு அருகே அமைந்துள்ள ஜாலான் அலோர் பகுதி வர்த்தகர்கள், தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய தூதரகங்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கோலாலம்பூர் குறி வைக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்த நிலையில், ஜாலான் அலோர் வெறிச்சோடிப் போகும் என சிலர் கருதியிருக்கலாம். ஆனால் நேற்று நடந்தது அதற்கு நேர்மாறாக இருந்தது.
அப்பகுதியில் காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதிலும், உயரதிகாரிகள் யாரும் தென்படவில்லை. வியாழக்கிழமை இரவு பெட்டாலிங் சாலை வர்த்தகர்கள் இணைந்து அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஏதேனும் பைகள் மற்றும் பொருட்கள் தென்படுகின்றனவா என அவர்கள் தீவிரமாகத் தேடினர்.
இதற்கிடையே ஜாலான் அலோர் பகுதிக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் சிரியா, இந்தோனேசியாவைச் சேர்ந்த இருவரோடு, உள்ளூர்வாசி ஒருவரையும் காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.