கோலாலம்பூர் : அவசரகால சட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியோடு முடிவடையவிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் மாமன்னர் சந்திப்பார் என்ற ஆரூடங்கள் வெளியாகியுள்ளன.
துன் மகாதீருக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவரும், அவசரகால சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரப் போராடும் குழுவில் இணைந்து போராடி வருபவருமான கைருடின் அபு ஹாசான் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்புக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாகினி வெளியிட்ட செய்தியின்படி இத்தகைய கூட்டம் நடைபெறும் என சில அரசாங்கத் தரப்புகள் தெரிவித்தன என்றாலும் முழு விவரங்களும் இன்னும் பெறப்படவில்லை.
கடந்த மாதம் முதற்கொண்டே மாமன்னருடனான சந்திப்பு குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் எனினும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காரணமாக அந்தக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்தார் என்றும் மலேசியாகினி செய்தி மேலும் குறிப்பிட்டது.
இதன் தொடர்பிலான அழைப்பு எதனையும் மஇகா இன்னும் பெறவில்லை என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையக் காலமாக ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற அறைகூவல்களை பல தரப்புகள் வெளியிட்டு வருகின்றன.