சிலிக்கான்வேலி – அமெரிக்காவின் சிலிக்கான்வேலியில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: “பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைதான் இப்போது பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கின்றன.
அரசு சிறப்பாக இயங்குகிறதா என்பதை இணையத்தை வைத்தே இளைஞர்கள் சோதித்துப் பார்த்து விடுகின்றனர். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவின் ஏழ்மையைத் தொழில்நுட்பம் கொண்டு விரட்டியடிக்கிறோம்.
சமூக வலைத்தளங்கள், சமூகத் தடைகளை உடைத்தெறிந்துள்ளன. நரேந்திரமோடி என்ற பெயரில் கைபேசிச் செயலி வெளியிட்டு அதன் மூலம் மக்களுடன் என்னால் உரையாட முடிகிறது. காகிதம் இல்லாத அரசாட்சியை நாங்கள் முன்னெடுக்கிறோம்.
டிஜிட்டல் அறிவின்மையையும், எழுத்தறிவின்மை போன்றே சீரியசாக கருத்தில் எடுத்துள்ளோம். இரண்டையும் அகற்ற இந்திய அரசு முயல்கிறது.
22 அதிகாரப்பூர்வ மொழி கொண்டது இந்தியா. அங்கு மாநில மொழிகளில் பயன்படுத்தும் வகையில், இணையம் வர வேண்டும். அப்போதுதான், அது வெற்றி பெறும்.
இந்திய வட்டார மொழிகளில் இணையத்தைக் கொண்டு வருவதாகச் சுந்தர் பிச்சை வாக்குறுதியளித்துள்ளார். அவருக்கு நன்றி.
கூகுகுடன் இணைந்து இந்தியாவிலுள்ள விமான நிலையங்களில் மட்டுமல்ல; இந்தியாவின் 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை இணையதள வசதியை அரசு அளிக்க உள்ளது. இதற்காக இந்திய அரசு கூகுளுடன் மேற்கொண்டுள்ளது” என்றார்.