சென்னை – சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆண்கள் கழிவறை அருகே மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெடிகுண்டு பீதி ஏற்பட்டு மக்கள் பெரும் பதற்றத்திற்கு ஆளானார்கள்.
இன்று பிற்பகல் சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட கடிகாரம் போன்றதொரு மர்மப் பொருள் இருப்பதையும், அதிலிருந்து பீப் பீப் என்ற சத்தம் வருவதையும் கண்ட சிலர், காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பொருளைச் சோதனை செய்து பார்த்தனர்.
சோதனைக்குப் பின்னர் அது வெடிகுண்டு அல்ல; வெறும் டைம்பீஸ் சாதனம்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்துக் காவல்துறையினர், பொதுமக்கள் யாரும் பீதியடையத்தேவையில்லை என்று அறிவித்தனர்.
இதனால் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பரபரப்பாகக் காணப்பட்ட உயர்நீதிமன்ற வளாகம் சற்று அமைதியானது.
எனினும், அந்த மர்மப் பொருளை அங்கே கொண்டு வந்து போட்டது யார்? எதற்காகக் கொண்டு வந்து போட்டார்கள் எனக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.