சென்னை – தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஏதோ சட்டமன்றத் தேர்தல் அளவிற்கு பல்வேறு களேபரங்கள் அடைந்து வரும் நிலையில், முன்னணி நடிகர்களான ரஜினியும், கமலும் வழக்கம் போல் ஒதுங்கி நின்று நடப்பதை கவனித்து வருகின்றனர். நடிகர் கமலாவது தான் யார் பக்கம் என்பதை வெளிப்படையாகக் கூறி உள்ள நிலையில், ரஜினியை இரு அணியினரும் மாறி மாறி சந்தித்தாலும் அவர் தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ராதிகா, “நடிகர் சங்க பிரச்னையை தீர்க்க ரஜினி, கமல்ஹாசன் ஏன் முன்வரவில்லை?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் அவர், “தேர்தலில் நிற்க வேண்டிய சூழலுக்கு நடிகர் சரத்குமார் அணி தள்ளப்பட்டுள்ளது. நடிகர் விஷால், கார்த்தியை யாரோ தூண்டி விடுகின்றனர். நடிகர் சங்கத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். தற்போது புகார் கூறுபவர்கள் நடிகர் சங்க கட்டிடத்தை இடிக்கும்போது எங்கே இருந்தார்கள்” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கிடையே சரத்குமார் அணி விஷால் அணியுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், விஷால் அணியினர் தேர்தலை சந்திப்பதில் உறுதியாக இருப்பதாக நடிகர் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.