பாங்காக் – தன்னை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தை மிரட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதான சுவிட்சர்லாந்து பிரஜை சேவியர் ஆன்ட்ரே ஜஸ்டோ, தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையைக் குறைக்க வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்து தெற்கு பாங்காக் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து ஜஸ்டோ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில், தண்டனைக் காலத்தை 6 மாதங்கள் அல்லது ஓராண்டாகக் குறைக்க வேண்டும், அல்லது அபராதம் மட்டும் விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
சுமார் 59 பக்கங்கள் கொண்ட மனுவை ஜஸ்டோவின் வழக்கறிஞர் வோராசிட் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தார். மனுவை தாக்கல் செய்ய 2 நாட்களே உள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
“தான் பணியாற்றிய பெட்ரோசவுதி இண்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ஆவணங்களை ஜஸ்டோ திரிக்கவில்லை. எனினும் இத்தகைய ஆவணங்களால் மலேசியப் பிரதமருக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு, ஜஸ்டோவிடம் இருந்து அந்த ஆவணங்களைப் பெற்ற மூன்றாம் தரப்பினரே காரணம்.
“ஏனெனில் அவர்கள் தான் அந்த ஆவணங்களை திரித்துப் பயன்படுத்தி உள்ளனர். எனவே அந்த ஆவணங்களைப் பெற்றவர்கள்தான் அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் சந்திக்க வேண்டியதும் அவர்கள்தானா” என்று வோராசிட் மேலும் கூறியுள்ளார்.