அபுஜா – ஆண்களுக்கு நிகராக பெண்கள் தழைத்தோங்கிவிட்டனர். பெண்களை சமமாக நடத்துதல், சமவாய்ப்பை பகிர்ந்தளித்தல் என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்தால், நம் பிடரியில் அடித்து, அந்த எண்ணம் தவறு என உணர்த்தும் சம்பவங்கள் உலகில் நடந்து வருகின்றன. அத்தகைய ஒன்று தான் இங்கு நாம் பார்க்கப்போவது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்கா, கேமரூன், நைஜீரியா, கினியா ரிபப்ளிக் முதலான நாடுகளில் பெண்கள் தொடர்பாக பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் செயல்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கின்றன. அத்தகைய நாடுகளில், ஆண்களிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற, பருவ வயதை அடையும் பெண்களின் மார்பகங்களில், சூடான இரும்பு அல்லது கற்களை வைத்து அழுத்தி, மார்பகத் திசுக்களின் வளர்ச்சியை முற்றிலுமாக தடுத்து விடுவது தெரிய வந்துள்ளது.
இத்தகைய காரியத்தை, குறிப்பிட்ட அந்த பெண்களின் தாய்மார்களே செய்து விடுகின்றனராம். இதன் மூலம் பெண்கள் பார்ப்பதற்கு பெண்மை தோற்றம் குறைந்தும், ஆண்களுக்கு கவர்ச்சிகரமாகத் தோன்றாமலும், உடல் ரீதியான துன்புறுத்தல்களில் இருந்தும், பாலியல் பலாத்காரங்களில் இருந்தும் காக்கப்படுவதாக அங்கு ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இப்படி மார்பகங்களை உருக்கி, பெண் தன்மையை இழந்த பெண்களின் எண்ணிக்கை 3.8 மில்லியனைத் தாண்டும் என ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்படி செய்வதனால், அந்நாடுகளில் உள்ள பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கடுமையான சிதைவுகளுக்கு ஆளாவதாகவும் ஐநா குறிப்பிட்டுள்ளது.
இதன் பாதிப்பு, அத்தகைய பெண்களை புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு ஆளாக்குவதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடைபெற்றுவரும் சம்பவங்களில் மற்றொரு ஏற்றுக் கொள்ள முடியாத கொடுமை, மார்பகங்களை தட்டையாக்கிக் கொண்ட பெண்களுக்கு குழந்தை பிறந்து விட்டால், பால் சுரக்க ஒரு வித கடி எறும்பை கடிக்க விட்டு சுரக்க வைக்கின்றனராம்.
இத்தகைய காரியங்கள் தற்போது தான் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பெண்கள் நல அமைப்பினர், ஆப்பிரிக்க பெண்களுக்காக பெரும் போராட்டங்களை தொடங்கி உள்ளனர்.
பெண்ணாகப் பிறந்த ஒரே பாவத்திற்காக பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, தன்னைத் தானே இப்படியான கொடுமைகளுக்கு ஆளாக்கிக் கொள்ளும் ஆப்பிரிக்க பெண்களின் நிலை, ஒட்டுமொத்த ஆண்கள் சமுதாயத்தையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது.