கோலாலம்பூர் – உணவுப் பொருட்களை தயார் செய்வதற்கும், அதை மடித்துக் கொடுப்பதற்கும் நாளிதழ்களைப் பயன்படுத்தும் முறைக்கு மலேசிய சுகாதார அமைச்சு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மலேசியாவில் பல இடங்களில் உணவுப் பொருட்களை நேரடியாக நாளிதழ்களில் வைத்து மடித்துக் கொடுக்கும் முறை பயன்படுத்தப்படுகின்றது.
அதேவேளையில், உணவுப்பொருட்களில் உள்ள அதிகமான எண்ணெய்யை உறிஞ்சுவதற்கும் நாளிதழ்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இது குறித்து சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா கூறுகையில், உணவுப் பொருட்களை பொட்டலங்களாக மடித்துக் கொடுக்கும் போது பிளாஸ்டிக் தாள்களையோ அல்லது வாழை இலையையோ பயன்படுத்த வேண்டும் என்றும், அதன் மேல் இரண்டாவது தாளாகத் தான் நாளிதழ்களைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுபாடுகள் உணவு சுகாதார விதிகள் 2009, விதிமுறை 35-ன் கீழ் கொண்டு வரப்பட்டது என்றும், இதை மீறும் உணவுக் கடை விற்பனையாளர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதமோ அல்லது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ வழங்கப்படும் என்று நூர் ஹிசாம் குறிப்பிட்டுள்ளார்.
நாளிதழ்களில் எழுத்துக்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ‘மை’ உணவுப் பொருட்களில் ஒட்டிக் கொண்டு நமது உடலுக்குள் செல்கிறது. இதனால் கேன்சர் உள்ளிட்ட பல வியாதிகள் வரும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.