கோலாலம்பூர் – நவீன திறன்பேசிகளின் வரவால், மடிக்கணினி உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கருவிகளிலும் நாம் தொடுதிரைப் பயன்பாட்டை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டோம். தொடுதிரைக் கணினிகள் இருந்தாலும், விலை விசயத்தில் அவை நம் கையை கடித்துவிடுகின்றன.
இதனை ஓரளவிற்கு சரிக்கட்ட, சுவீடன் நாட்டை சேர்ந்த நியோநோட் (Neonode) என்ற நிறுவனம் முயற்சித்துள்ளது. ஏர் பார் (Air Bar) என்ற பிரதேயகமான யூஎஸ்பி (USB) கருவியை, அந்நிறுவனம் தயாரித்துள்ளது. நமது மடிக்கணினியின் யூஎஸ்பி போர்ட்டில் அதன் ஒரு பகுதியை பொருத்திவிட்டு, அதன் தலைப்பகுதியை நமது மடிக்கணினித் திரையின் அடிப்பகுதியில் வைத்தால் போதும், சாதாரண திரையுடன் இருக்கும் நமது மடிக்கணினி, தொடுதிரை ஆகிவிடும். இதற்காக வேறு எந்த மென்பொருளையும் மேம்படுத்தத் தேவையில்லை.
கண்ணுக்கு புலப்படாத ஒளிக்கதிர்களை சாதா திரையில் பரப்பி, அந்த கருவி நமது கணினியின் திரையைத் தொடுதிரை ஆக்கிவிடுகிறது. அப்புறம் என்ன, புகைப்படங்கள் முதல் சாளரங்கள் மாற்றுவதை வரை எதற்கும் கீ போர், மௌஸ் போன்றவைப் பயன்படுத்தத் தேவையே இல்லை. கை விரல்களே போதுமானது.
2016-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த ‘ஏர் பார்’ கருவியின் அறிமுக விலை 49 அமெரிக்க டாலர்கள் தான். முதற்கட்டமாக, 15.6 அங்குல திரை கொண்ட மடிக்கணினிகளுக்கு மட்டும் இந்த கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் மற்றும் குரோம் இயங்குதளங்களுக்கு மட்டும் பொருத்தமாக இது இயங்கும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
‘ஏர் பார்’ காணொளியைக் கீழே காண்க: