கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 29) தனது 92-வது வயதில் சென்னையில் காலமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணனின் மறைவுக்கு உத்தமம் எனப்படும் அனைத்துலக தமிழ் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் சார்பாக அதன் மலேசியக் கிளையின் தலைவரான சி.ம.இளந்தமிழ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
“உத்தமம் என்ற அனைத்துலக அமைப்பை ஒரு குழு உருவாக்கியபோது அதில் ஆனந்தகிருஷ்ணன் முக்கியப் பங்கை வகித்தார். தமிழ்க் கணினி உலகின் பிதாமகர் என அவரைப் போற்றலாம். அந்த அளவுக்கு தனது அயராத உழைப்பையும், வழிகாட்டுதலையும் அவர் வழங்கிச் சென்றிருக்கிறார். தமிழ் மொழியின் நவீனத் தொழில்நுட்பத்திற்கான முன்னோடி என்றும் அவரைக் கூறலாம். தமிழ் மொழி, கணினி, இணையம் தொடர்பான எல்லா மாநாடுகளிலும் அவர் தவறாது கலந்து கொள்வார். பொறியியல் துறை கல்வியை அவர் பெற்றிருந்தாலும் தமிழ் மொழியின்பால் மிகுந்த ஈடுபாடு காட்டினார்” என்றும் இளந்தமிழ் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.
“2012-ஆம் ஆண்டில் உத்தமம் அனைத்துலக மாநாடு மலேசியாவில் எனது தலைமையில் நடைபெற்ற போது அதில் அவர் கலந்து கொண்டு பெருமைப்படுத்தினார். அவர் கலந்து கொள்ளும் பெரும்பாலான மாநாடுகளில் அவருக்கே முதன்மை உரை வழங்கும் கௌரவம் வழங்கப்படும் அளவுக்கு அவர் சிறப்பு பெற்றிருந்தார். அன்னாரின் 90-வது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றபோது அதில் மலேசியாவின் சார்பில் நானும் முத்து நெடுமாறனும் கலந்து கொண்டோம். அந்த நினைவுகளும் அன்னாரின் பங்களிப்பும் என்றும் எப்போதும் உலகம் முழுவதும் உள்ள கணினித் தமிழ் ஆர்வலர்களிடத்தில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்றும் இளந்தமிழ் தனது இரங்கல் செய்தில் தெரிவித்தார்.