Home Featured இந்தியா வேலூரில் விழுந்தது விண்கல் தானா? – தமிழக அரசின் அறிவிப்பால் குழப்பத்தில் விஞ்ஞானிகள்!

வேலூரில் விழுந்தது விண்கல் தானா? – தமிழக அரசின் அறிவிப்பால் குழப்பத்தில் விஞ்ஞானிகள்!

859
0
SHARE
Ad

Meteoriteபுதுடெல்லி – வேலூர் நாட்டறம்பள்ளி அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல், வானிலிருந்து வந்த மர்மப்பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது.

இதில், கல்லூரி பேருந்து ஓட்டுநர் காமராஜ் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

மேலும், கட்டிடங்களின் கண்ணாடிகள், வாகனங்களின் கண்ணாடிகள் ஆகியவையும் நொறுங்கின.

#TamilSchoolmychoice

மர்மப் பொருள் வெடித்துச் சிதறிய இடத்தில் சுமார் 2 அடி அகலம், 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டு, அதிலிருந்து சிறிது நேரம் புகை வந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், வானில் இருந்து வந்தது விண்கல் தான் என்பதை எதை வைத்து முடிவு செய்தீர்கள்? என அறிவியல் விஞ்ஞானிகள் தமிழக அரசிடம் விளக்கம் கோரியிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

காரணம், உலகில் இதுவரை விண்கல் விழுந்த வரலாற்றில், மரணம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

உலக வரலாற்றில் விண்கல் தாக்கிய முதல் மனிதர் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன் ஹாட்ஜெஸ் என்ற பெண்மணி தான் என ‘நேஷனல் ஜியோகிராபிக்’ கூறுகின்றது.

கடந்த 1954-ம் ஆண்டு, அலபாமாவிலுள்ள சிலாகாகா என்ற இடத்தில் வீட்டின் மேற்கூரையில் கறுப்பு நிறக் கல் ஒன்று விழுந்தது. இதில் அப்பெண்ணின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனிடையே, வானில் இருந்து விழும் விண்கற்களை, வானிலை ஆராய்ச்சியாளர்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அவை பூமியை நெருங்குவதற்கு முன்னரே மக்களுக்குத் தெரிவித்தும் விடுகின்றனர்.

இஸ்ரோ மார்ஸ் ஆர்பிட்டர் இயக்கத்தின் திட்ட இயக்குநர் வி. ஆதிமூர்த்தி கூறுகையில், “அனைத்துலக விண்கற்கள் கண்காணிப்பு அமைப்பு போன்றவை 2016-ம் ஆண்டிற்கான நாள் பட்டியலை வெளியிட்டுவிட்டன. அந்தப் பட்டியலின் படி அன்றைய தினங்களில் விண்கற்கள் பூமியில் விழ வாய்ப்புகள் உள்ளன. வான் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு அப்பட்டியல் உதவியாக இருக்கும்”

“விண்கற்கள் விழுவது அவர்கள் கணித்த தேதிகளில் இருந்து பெரும்பாலும் மாறாது. ஜனவரி 3-ம் தேத் தான் கடைசியாக விண்கல் விழுந்தது. அதன்பின்னர் ஏப்ரல் 22 மற்றும் 23-ம் தேதிகளில் தான். பிப்ரவரி மாதத்தில் அப்படி ஒரு சம்பவம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எப்படி தமிழக அரசு விழுந்தது விண்கல் தான் என்ற முடிவிற்கு வந்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, இறந்த ஓட்டுநர் காமராஜ் குடும்பத்தினருக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், காயமடைந்த 3 பேருக்கு தலா 25,000 ரூபாய் வழங்குவதாகவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.