கோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பதவியிலிருந்து நீக்க, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் இன்று எதிர்கட்சித் தலைவர்களுடன் இணைந்து பிரகடனம் ஒன்றில் கையெழுத்திட்டார்.
அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், முன்னாள் துணைப்பிரதமர் மொகிதின் யாசின், சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆகியோருடன் கலந்து கொண்ட மகாதீர், “இந்த மக்கள் தங்களது நோக்கத்தைக் காட்டுகிறார்கள். நஜிப்பை விலக்குவதும், அவர் இனி பிரதமராக இருக்க முடியாது என்பதை வலியுறுத்த வேண்டிய தேவையையும் குறிக்கும் விதமாக இந்த பிரகடனம் செய்யப்படுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நாங்களெல்லாம் மலேசிய குடிமகன்கள் என்பதால் எங்களது கருத்தை வெளிப்படுத்துகின்றோம். இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்க எல்லா மலேசியர்களையும் அழைக்கின்றோம்”
“அதோடு, மக்களின் விருப்பங்களையும் கேட்கும் திட்டம் எங்களுக்கு உள்ளது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு இன்னும் நிறைய மக்கள் இந்த பிரகடனத்தில் கையெழுத்திடுவார்கள் என்று நம்புகின்றோம்” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் மகாதீருடன், முன்னாள் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங், முன்னாள் மசீச தலைவர் துன் டாக்டர் லிங் லியாங் சிக், அமனா தலைவர் மொகமட் சாபு மற்றும் முன்னாள் கிடா தலைவர் டத்தோ சைட் இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படம்: நன்றி (The Star)