சென்னை – காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் கடந்த 17-ஆம் தேதி இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அப்போது சில இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. கார்கில் பகுதியில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள ஒரு ராணுவ சாவடியின் மீது பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. பனிப்பாறைகள் சரிவில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த இரு ராணுவ வீரர்கள் சிக்கினார்கள்.
சரிந்து விழுந்த பனிப்பாறைகள் அவர்களை சிறிது தூரம் இழுத்துச் சென்றன. இதனால் வெளியே வர முடியாமல் பனிப்பாறைகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை. அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.
பனிக்கட்டி குவியலுக்குள் 12 அடி ஆழத்தில் புதைந்து கிடந்த ஒரு வீர்ரை நேற்று மீட்புக்குழுவினர் பிணமாக மீட்டனர். பனிச்சரிவில் சிக்கி பலியான அந்த வீரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
அவரது பெயர் கே.விஜயகுமார் (வயது 23). சிப்பாய் ஆக பணிபுரிந்து வந்த விஜயகுமார் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வல்லராமபுரத்தைச் சேர்ந்தவர். விஜயகுமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ராணுவ அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
விஜயகுமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக வடக்கு பிராந்திய ராணுவ தளபதி டி.எஸ்.ஹூடா கூறினார். விஜயகுமாரின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நடைபெற உள்ளது.