புதுடெல்லி – பெல்ஜியம் பிரசல்ஸ் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில் நேற்று காலை 8 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன.
இதில் விமான நிலையத்தில் இருந்த 13 பேர் பலியாகினர், 35 பேர் காயம் அடைந்தனர். முன்னதாக மும்பையில் இருந்து கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானம் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நேற்று காலை 7.11 மணிக்கும், டெல்லியில் இருந்து கிளம்பிய விமானம் காலை 8 மணிக்கும் தரையிறங்கியது.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் ஒருவர் பெண் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து வரும் 26-ஆம் தேதி வரை பிரசல்ஸ்ஸுக்கான விமான சேவையை நிறுத்தி வைப்பதாக ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பிரசல்ஸ்ஸில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து அறிந்தோம். ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள், பயணிகள் குறித்த விபரங்களை பெற அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரசல்ஸ்ஸில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானம் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மேலும் தகவல் அறிய இந்தியா – 1800225522, அமெரிக்கா – 1-877-8359538, இங்கிலாந்து – 08081011199 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.