ஜகார்த்தா – கடந்த திங்கட்கிழமை ஜகார்த்தாவில் ஓடுதளத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதால், ஏற்பட்ட தீவிபத்தில் பயணிகள் உயிர் பயத்தில் அலறியுள்ளனர்.
ஜகார்த்தா விமான நிலையத்தில் நேற்று 49 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் புறப்படுவதற்குத் தயாரான பாத்திக் ஏர் (Batik Air Boeing 737-800) விமானத்தின் இறக்கை, ஓடுபாதையில் இழுத்து வரப்பட்டுக் கொண்டிருந்த டிரான்ஸ்நூசா விமானத்தின் வால்பகுதியில் மோதியது.
இதனால் பாத்திக் ஏர் விமானத்தின் இறக்கை சேதமடைந்து தீப்பற்றிக் கொண்டது. விமானத்தின் உள்பகுதியில் கடும் புகையுடன் பெட்ரோல் நாற்றமும் பரவ பயணிகள் உயிர் பயத்தில் அலறியுள்ளனர்.
இந்நிலையில், உடனடியாக விமானத்தின் அவசரக்கதவுகள் திறக்கப்பட்டு பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் இல்லை என்றாலும், விபத்து குறித்து விசாரணை நடத்த இந்தோனிசிய அரசு விமானப் போக்குவரத்து ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.