இதன்படி, எல்லாத் தகவல் பரிமாற்றங்களும், குறுஞ்செய்திகளும், மறைக்குறியீடாக்கம் – குறியீடுகள் மூலம் மறைக்கப்படுவது (Encryption) என்ற தொழில்நுட்பத்தின் படி கவசமாகப் பாதுகாக்கப்படும். இதனால், போலீஸ் போன்ற புலனாய்வுத் துறையினரும், அரசாங்கப் பாதுகாப்புத் துறையினரும் இந்த செயலியின்வழி அனுப்பப்படும் செய்திகளை ஊடுருவிப் படிக்க முடியாது.
கடந்த சில நாட்களாக வாட்ஸ் எப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்போது, இதுகுறித்த நினைவூட்டலை அந்த நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.
வாட்ஸ் எப்பின் வழி நாம் யாருக்கு அனுப்புகின்றோமோ அவர்கள் மட்டுமே அந்தத் தகவல்களைப் படிக்க முடியுமே தவிர, வாட்ஸ் எப் நிறுவனத்தினர் கூட அந்தத் தகவல்களை அணுகிப் படிக்க முடியாது.
ஆனால், இதன் காரணமாக அரசாங்கப் புலனாய்வுத் துறையினர் தற்போது இந்த நடைமுறையினால் சில தயக்கங்களை வெளியிட்டு வருகின்றனர். வாட்ஸ் எப் நிறுவனம் தனிமனித உரிமைகளை மதிக்கவும், பாதுகாக்கவும் நோக்கம் கொண்டுள்ளது என்றாலும், இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், தீவிரவாதிகள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாமல் போய்விடும் – குற்றம் நடந்தால் அதுகுறித்த புலனாய்வுகளை மேற்கொள்வதில் தடங்கல் ஏற்படும் என அரசாங்க இலாகாக்கள் கருதுகின்றன.
ஆனால், காவல் துறையோ, அரசாங்க இலாகாவோ, குற்றம் அல்லது பயங்கரவாதச் செயல் தொடர்பாக குறிப்பிட்ட தகவலை வாட்ஸ் எப்பின் தகவல்கள் மூலம் பெற விரும்பினால் அதற்கு வாட்ஸ் எப் நிறுவனம் ஒத்துழைக்குமா அல்லது ஆப்பிள் நிறுவனம் போல ஒத்துழைக்க மறுக்குமா என்பது குறித்த விளக்கங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.