கூச்சிங் – நாளை சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில் இன்று கூச்சிங் சென்றடைந்த ஜசெக தலைவர்களில் ஒருவரும், பினாங்கு மாநில சட்டமன்ற மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினருமான ஜக்டீப் சிங் டியோ, அங்கு குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டார்.
ஜக்டீப் மறைந்த ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்கின் மகனுமாவார். ஜசெக பினாங்கு மாநில துணைத் தலைவராகவும் அவர் செயலாற்றி வருகின்றார்.
அவர் இன்று காலை 9.00 மணியளவில் கூச்சிங் விமான நிலையம் வந்தடைந்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவரிடம் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
“ஜனநாயகமற்ற போக்கை சரவாக் மாநிலம் கடைப்பிடித்து வருகின்றது. அட்னான் சாத்திமின் அரசாங்கம் அச்சப்படுவதையே இது காட்டுகின்றது. சரவாக் மலேசியாவின் ஒரு பகுதியாகும். மலேசியக் குடிமகன் என்ற முறையில் அங்கு நுழைவதற்கு எனக்கு உரிமை இருக்கின்றது” என்று தன் மீது விதிக்கப்பட்ட தடை குறித்து கருத்துரைத்த ஜக்டீப் கூறினார்.
அவர் கூச்சிங் விமான நிலையத்தில், குடிநுழைவுத் துறை அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இன்று காலை முதல் டுவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இதற்கிடையில் நேற்று பேராக் ஜசெக தலைவரான இங்கா கோர் மிங் சரவாக்கின் சிபு நகரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
நேற்று கோத்தா கினபாலு நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு பிகேஆர் கட்சித் தலைவர் ரபிசி ரம்லியும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றார்.