சரவாக்கின் 11வது சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 9.00 மணிக்குத் தொடங்குகின்றது. அனைத்து 82 தொகுதிகளுக்கும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒவ்வொரு தொகுதியிலும் தேசிய முன்னணியுடன் நேரடிப் போட்டியை உருவாக்க எதிர்க் கட்சிகள் முனைந்துள்ளன. நேற்று இரவு வரை பிகேஆர் கட்சிக்கும், ஜசெகவுக்கும் இடையில் தொகுதி உடன்பாடுகள் காண்பதில் சிக்கல் நிலவியதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இருப்பினும், அனைத்தும் சுமுகமான முறையில் தீர்க்கப்பட்டிருந்தாலும், என்ன நடக்கப் போகிறது என்ற இறுதி நிலவரம் இன்று வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர்தான் தெரியவரும்.
புதிதாக 11 தொகுதிகள் இந்த முறை அதிகரிக்கப்பட்டிருப்பதால், இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிகப் பெரியதாக அமையப் போகும் இந்தத் தேர்தல், இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக கருதப்படுகின்றது.
சரவாக் தேர்தலுக்கான வாக்களிப்பு மே 7ஆம் தேதியாகும்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, 1.14 மில்லியன் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 25,022 வாக்காளர்கள் (இராணுவம், போலீஸ் போன்ற துறைகள்) முன்கூட்டியே வாக்களிப்பார்கள். 106 பேர் வெளிநாடுகளில் இருந்து அஞ்சல் வழி வாக்களிப்பார்கள்.