புதுச்சேரி – என்.ஆர். காங்கிரஸ் ரங்கசாமி ஆட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா புதுச்சேரியில் பிரச்சாரம் செய்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உப்பளம் புதிய துறைமுகம் திடலில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:- புதுச்சேரியில் விவசாயமே வீழ்ந்து விட்டது. எந்தவித தொழில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. உள்ள தொழிற்சாலைகளுக்கும் மூடுவிழா நடந்து கொண்டிருக்கிறது. கூட்டணி தர்மத்தை குழி தோண்டிப் புதைத்தவர் ரங்கசாமி.
கூட்டணி தர்மத்தை மட்டுமல்ல, இந்த மாநிலத்தையே புதை குழியில் தள்ளியுள்ளார் ரங்கசாமி. இவருடைய ஆட்சிக் காலத்திலும் புதுச்சேரி எந்த விதமான வளர்ச்சியையும் அடையவில்லை.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் கொடிகட்டி பறக்கின்றன. ரங்கசாமியால் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. மத்திய அரசை வலியுறுத்தியோ, வற்புறுத்தியோ, எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு சமம். எனவே, என்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.