Home Featured தமிழ் நாடு தகிக்கும் தேர்தல் கணங்களிலும், தாயை மறக்காத தமிழகத் தலைவர்கள்!

தகிக்கும் தேர்தல் கணங்களிலும், தாயை மறக்காத தமிழகத் தலைவர்கள்!

782
0
SHARE
Ad

சென்னை – பொதுவாக யாராக இருந்தாலும் தங்களின் தாயார் மீது தனிப்பட்ட பாசமும், மரியாதையும் கொண்டிருப்பார்கள். தமிழ் நாட்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அனல் பறக்கும் பிரச்சாரங்கள், தகிக்கும் வெயிலில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் கூட, தமிழகத் தலைவர்கள் தங்களின் தாயாரை நினைவு கூர்ந்து செயல்படும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Karunanithi-mother -nomination-தனது தாயாரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் கலைஞர்….

தனது 92வது வயதில் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக தேர்தல் களத்தில் நிற்கும் கலைஞர் கருணாநிதி, திருவாரூரில் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட மீண்டும் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பாக தனது தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடம் சென்று, மலர் தூவி வணக்கம் செலுத்தி விட்டுத்தான் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் கலைஞர்.

வைகோவின் தாயார் பாசம்

கலைஞரைப் பற்றி சில தவறான வார்த்தைகளைக் கூறிவிட்டதற்காக வைகோ மீதிலான பலத்த கண்டனங்கள் அண்மையில் எழுந்தன. நாடு முழுக்க அவரது உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன.

அதன் பின்னர் மாமண்டூரில் நடந்த பிரம்மாண்டமான மக்கள் நலக் கூட்டணி கூட்டத்தில் பேசும்போது வைகோ “எனது உருவப் பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. கொடும்பாவிகள் கொளுத்தப்படுகின்றன. நல்லவேளை எனது தாயார் இல்லை இதையெல்லாம் பார்ப்பதற்கு” என உருகினார் வைகோ.

Vaiko - Motherவைகோவின் தாயார் அமரர் மாரியம்மாள்….

அதன் பின்னர் அவரது தாயார் மாரியம்மாள் குறித்து பல நிமிடங்கள் விரிவாக அந்தக் கூட்டத்தில் எடுத்துரைத்தார் வைகோ. தான் ஒரு போராளியாக உருவெடுப்பதற்கு எப்படியெல்லாம் தனது தாயார் பின்னணியில் இருந்து துணிவையும், மனத் திடத்தையும் வழங்கினார் எனவும் அவர் விரிவாகக் கூறினார்.

“இந்தப் பிரம்மாண்டமான கூட்டத்தின் முன்னால் நான் இருந்து பேசுவதைக் கண்டிருந்தால், எனது தாயார் மிகவும் மகிழ்ந்திருப்பார்” என்றும் கூறினார் வைகோ.

வைகோவின் தாயார் கடந்த ஆண்டில் தனது 95வது வயதைக் கடந்த நிலையில் காலமானார்.

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா

Jayalalitha-with mother Santhiya-

ஜெயலலிதா தனது தாயார் சந்தியாவுடன்…

தனது பெயர் மறைந்து போய் “அம்மா” என்பதுவே நிலையான பெயர் என்ற அளவுக்கு பெயர் வாங்கி விட்டவர் ஜெயலலிதா. அவரது அம்மா மீது ஜெயலலிதா கொண்டிருக்கும் பாசமும் தமிழகத்தில் பிரசித்தமானதுதான். தனது இரண்டாவது வயதில் தந்தையை இழந்த ஜெயலலிதா அதன் பின்னர் தனது தாயாரின் அரவணைப்பிலும், வழிகாட்டுதலிலும் வளர்ந்தார், பின்னர் திரைப்படங்களில் ஜொலித்தார் என்பதும் வரலாறு.

அதிமுக பிரச்சாரக் கூட்டங்களிலும், பல சமயங்களில் நகரின் மையங்களில் இடம் பெறும் பிரம்மாண்டமான பதாகைகளிலும் ஜெயலலிதா தனது தாயாருடன் இணைந்திருக்கும் படங்கள் அடிக்கடி இடம் பெறும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பல தருணங்களில் தனது தாயார் சந்தியாவைப் பற்றி நெகிழ்ந்து கூறியுள்ளார். அண்மையில் அதிகமான பாடல்கள் பாடிய பி.சுசிலாவுக்கு கின்னஸ் விருது கிடைத்தபோது தெரிவித்த பாராட்டு செய்தியில் கூட, சுசிலா தனது தாயாருக்கும், தனக்கும் பின்னணி பாடியவர் என்று கூறி பெருமைப்பட்டிருந்தார் ஜெயலலிதா.

இந்த முறை ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்பாக அவரது தாயாரை வணங்கிச் சென்றார் என்பது போன்ற செய்திகள் வெளிவரவில்லை. இருந்தாலும், ஜெயலலிதாவின் தாய்ப்பாசம் கூடிய விரைவில் ஏதாவது ஒரு ரூபத்தில் இந்தத் தேர்தலில் வெளிப்படலாம்.

-செல்லியல் தொகுப்பு