கோலாலம்பூர் – முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு எதிராக இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தொடுத்திருந்த அவதூறு மீதிலான வழக்கு இன்று இரு தரப்புகளுக்கும் இடையில் சமாதான உடன்பாடு முறையில் முடிவுக்கு வந்தது.
பழனிவேலுவின் அந்த அறிக்கையை அவரது வழக்கறிஞர் ஆர்.தயாளன் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முகமட் சாக்கி அப்துல் வஹாப் முன்னிலையில், நீதிபதியின் தனியறையில் வாசித்தார். அப்போது சரவணனும், அவரது வழக்கறிஞர் வி.பிரேம்சங்கரும் உடனிருந்தனர். ஆனால், பழனிவேல் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி தமிழ் மலர் நாளிதழில் பதிப்பிக்கப்பட்ட செய்தியொன்றில் தன்மீதான அவதூறான, பொய்யான கருத்துகளை பழனிவேல் கூறியதாக சரவணன் இந்த வழக்கைத் தொடுத்திருந்தார். கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி இந்த வழக்கை அவர் தொடுத்திருந்தார்.
பழனிவேலுவின் கருத்துகளால், நாம் இயக்கத்தின் தலைவராக இருக்கும் தனது பதவிக்கும், தான் வகிக்கும் அரசாங்கப் பொறுப்புகள் மீதும் எதிர்மறையான தோற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் சரவணன் தனது வழக்கு மனுவில் தெரிவித்திருந்தார்.
வழக்கின் முடிவுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த சரவணன், பழனிவேல் மீதான வழக்கு மீட்டுக் கொள்ளப்பட்டாலும், தமிழ் மலர் மீதான அவதூறு வழக்கு தொடர்ந்து நடைபெறும் என அறிவித்தார்.
தமிழ் மலர் மீதான சரவணனின் அவதூறு வழக்கு எதிர்வரும் மே 3ஆம் தேதி தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.