ஜோர்ஜ் டவுன் – தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் இஸ்லாமை அவமதிக்கும் விதத்தில் தேச நிந்தனை சட்டத்திற்குட்பட்ட வகையில் சில கருத்துகளைப் பதிவு செய்த நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு தொழிற்சாலை ஊழியரான 26 வயதுடைய அந்த நபர் நேற்று புதன்கிழமை அதிகாலை சுங்கைப்பட்டாணியில் கைது செய்யப்பட்டதாக பினாங்கு காவல் துறை தலைவர் டத்தோ அப்துல் கபார் ரஜாப் தெரிவித்துள்ளார்.
மாநில காவல் துறை தலைமையகத்திற்கு, அந்த முகநூல் பதிவு தொடர்பாக வாட்ஸ்எப் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து காவல் துறையினர் நடவடிக்கையில் இறங்கியதாகவும் அப்துல் கபார் தெரிவித்துள்ளார்.
அந்தப் முகநூல் பதிவு பதிவேற்றம் செய்யப்பட்ட கைத்தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்காக மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவார் எனவும் தெரிவித்த அப்துல் கபார், நாட்டில் இன, மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையிலான கருத்துப் பரிமாற்றங்களை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்றும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.