Home Featured தமிழ் நாடு தமிழக சட்டமன்றத் தேர்தல்: 6,812 பேர் வேட்புமனு தாக்கல்-தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல்: 6,812 பேர் வேட்புமனு தாக்கல்-தேர்தல் ஆணையம் தகவல்!

637
0
SHARE
Ad

rajesh lakhoni(N)சென்னை – 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க.- த.மா.கா., பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதா என 5 முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனால் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது. 234 தொகுதிகளிலும் மொத்தம் 6,812 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 2,669 பேர் மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 6,054 பேர் ஆண்கள்; 756 பேர் பெண்கள் ஆவார்கள். திருநங்கைகள் இருவரும் மனுதாக்கல் செய்து உள்ளனர். இதில் ஒரு சிலர் தங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மொத்தம் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் மொத்தம் 23 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அவரையும் சேர்த்து 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். விஜயகாந்த் என்ற பெயரில், அவரை தவிர மேலும் 2 பேர் இந்த தொகுதியில் மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் கடலூர் தொகுதியில் மொத்தம் 25 பேரும் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (சனிக்கிழமை) நடைபெறும். அப்போது குறைபாடுள்ள மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனு பரிசீலனையின் போது 2 தொகுதிகளுக்கு ஒரு பொதுப்பார்வையாளர் இருப்பார்.

வேட்புமனு பரிசீலனை முழுவதும் காணொளிமூலம் காண்பிக்கப்படும். யார்-யாருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விவரம் இன்று மாலை தெரியவரும்.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள மே 2-ஆம் தேதி(திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போதுதான் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதுதெரியவரும் என தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.