சென்னை – தமிழகம் கடந்த 30 ஆண்டுகளாகவே ஊழலில் சிக்கி தவிக்கிறது என்றும், ஊழல் செய்வதில் திமுக – அதிமுக இடையே போட்டி நடைபெறுவதாகவும் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக அரசால், தமிழக மின் வாரியத்திற்கு, 73 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பியுஷ் கோயல் புகார் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த திங்கட்கிழமை நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் அதிமுக சாதனைகள், தேர்தல் பிரச்சாரத்தை சொல்லி வாக்கு கேட்டு வருகிறது.
திமுக, மக்கள் நலக்கூட்டணி, பாஜக என பலமுனைகளில் இருந்து ஆளுங்கட்சியை விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனி அணியாக போட்டியிடுகிறது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க-தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் ஊழலில் யார் பெரியவர்கள் என்று போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் மோடி அரசு ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருகிறது. கடந்த 66 ஆண்டுகளாக வடமாநிலங்களில் இருந்து தமிழகம் உள்பட தென்மாநிலங்களுக்கு வெறும் 3 ஆயிரத்து 450 மெகாவாட் மின்சாரம் தான் கொண்டு வரமுடிந்தது. ஆனால் மோடி அரசு பதவியேற்று, 2 ஆண்டுகளில் கூடுதலாக 2 ஆயிரத்து 450 மெகாவாட் மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
கடந்த, 10 ஆண்டுகளில் திமுக – அதிமுக அரசால் தமிழக மின் துறையில், 73 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.