திருப்பூர் : இன்று அகில இந்தியாவையும் உலுக்கும் விதமாக- வரலாற்றில் இல்லாத அளவுக்கு 3 கொள்கலன் (கொண்டெய்னர்) லாரிகளில் 570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்டிருக்கின்றது.
தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கு உரிமை கோரி இதுவரை யாரும் முன்வரவில்லை என்பதால், இந்தப் பணத்தின் பின்னணி குறித்த சந்தேகங்கள் எழுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்த விசாரணைகள் நடத்தப்பட வருமானத் துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மற்ற துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.05 மணியளவில் திருப்பூர் அருகே கோவையிலிருந்து ஐதராபாத்திற்கு செல்லும் வழியில் உரிய ஆவணங்களின்றி 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் 7 கிலோ மீட்டர் வரை இந்த லாரிகளைத் துரத்திச் சென்று பறக்கும் படையினர் இந்தப் பணத்தை செங்கப்பள்ளி என்ற இடத்திற்கு அருகே கைப்பற்றி உள்ளனர்.
இந்த கொள்கலன் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த காவலுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பணத்திற்கான ஆவணங்களின் நகல்கள் மட்டுமே தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த பணம் கோவையில் இருந்து விஜயவாடா எஸ்பிஐ வங்கிக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.