கோலாலம்பூர் – இன்று ஞாயிற்றுக்கிழமை ரஜினிகாந்தின் “கபாலி” படப்பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், அந்தப் படத்தின் திரையீட்டுக்கு முந்திய விளம்பர யுக்திகளில் ஒன்றாக, இன்று ஃபிளாஷ் மோப் (FLASHMOB) எனப்படும் நிகழ்ச்சி தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா வட்டாரத்தில் நடைபெறுகின்றது.
ஃபிளாஷ் மோப் – என்பது திடீர்த் தோன்றல் ஆட்டமாகும். அதாவது, ஒரு பிரச்சனை குறித்தோ, விவகாரம் குறித்தோ, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஒரு குழுவினர் திடீரெனத் தோன்றி ஆட்டம் பாட்டம் என ஈடுபடுவதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதுதான் இந்த ஃபிளாஷ் மோப் நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
ரஜினிகாந்த் இரசிகர்களால் நடத்தப்படும் இந்த ஃபிளாஷ் மோப் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 முதல் தொடங்குகின்றது. மாலை 6.00 மணி வரை இந்த ஆட்டம் பாட்டம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு, இலவச கார் கண்ணாடி ஒட்டுத் தாள்களும் (ஸ்டிக்கர்), சில நிபந்தனைகளுடன் வழங்கப்படும். கபாலி படத்தின் வெளியீட்டாளர்களான மாலிக் ஸ்ட்ரீம் நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில், ஹாட்லிங்க் கைத்தொலைபேசி முன்கட்டண நிறுவனம், ரெக்ஸ்புல் என்ற ஊக்கசக்தி பானம், டிசினிமா ஆகிய நிறுவனங்களும் இணைந்துள்ளன.
இந்த திடீர்த் தோன்றல் ஆட்டம் நிகழ்ச்சி குறித்த கூடுதல் விவரங்களைக் கீழ்க்காணும் யூடியூப் காணொளி இணைப்பில் காணலாம்:-