திருவனந்தபுரம் – கடந்த மார்ச் 6ஆம் தேதி காலமான, பிரபல மலையாள, தமிழ் நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அது குறித்து மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐ விசாரிக்க வேண்டுமென கேரள அரசாங்கம் சிபாரிசு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கலாபவன்மணி மரணம் தொடர்பான மர்மங்கள் விலகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த கலாபவன் பணி, சாலக்கு டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தினார். அதன் பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மார்ச் 4-ம் தேதி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல், 2 நாட்கள் கழித்து, மார்ச் 6-ம் தேதி அவர் உயிரிழந்தார்.
அவரது மர்ம மரணம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அருந்திய மதுவில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
கேரளக் காவல் துறையினரின் விசாரணை திருப்திகரமாக இல்லை என கலாபவன் மணியின் உறவினர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி, வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
இருப்பினும், கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
தற்போது கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய அரசு சிபிஐ விசாரணைக்கு சிபாரிசு செய்துள்ளது.
கலாபவன் மணியின் உறவினர்கள் முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தற்போது சிபிஐ விசாரணைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.