புத்ராஜெயா – வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அபு காசிம் மொகமெட் பதவி விலகுவார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா இன்று அறிவித்துள்ளார்.
தான் பதவி விலகுவதாக அபு காசிம் அளித்த ஒரு மாத முன்கூட்டிய விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட பேரரசர் மலேசிய ஊழல் ஒழிப்புச் சட்டம் 2009 (ஆக்ட் 694), துணைப்பிரிவு 5(3)-ன் கீழ், அவ்விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
எனினும், அபு காசிம் ஊழல் ஒழிப்பு சேவை அதிகாரியாக அவரது கட்டாய ஓய்வுக் காலமான 2020-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி வரையில் தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அலி ஹம்சா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையராக அபு காசிம் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.